×

மார்கழி மாதத்தை யொட்டி கோவில்பட்டியில் கலர் கோலப்பொடி விற்பனை மும்முரம்

கோவில்பட்டி, டிச.18: மார்கழி மாதம் பிறந்ததையொட்டி கோவில்பட்டி கடைகளில் 24 வகையான வண்ண கோலப்பொடிகளின் விற்பனை களை கட்டியுள்ளது.  தமிழர்களின் பாரம்பரிய கலாசார வழக்கங்களில் கோலமிடுதலும் ஒன்றாக திகழ்கிறது. தினமும் கோயில்கள், இல்லங்கள் மற்றும் பூஜை அறைகளில் கோலங்கள் இடுவது ஒரு அழகு கலையாக இருந்து வருகிறது.   ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறந்து விட்டாலே தமிழ் பெண்கள் தங்களது இல்லங்களின் முன்பு மாக்கோலம், வண்ணமிகு கோலங்களை இட்டு அழகு பார்ப்பார்கள். இந்தாண்டு மார்கழி மாத பிறப்பு நேற்றுமுன்தினம் துவங்கியது.      இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பகுதி, கிருஷ்ணன்கோயில் தெரு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில்ரோடு, மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு போன்ற பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கோலப்பொடி கடைகள், பேன்ஸி ஸ்டோர், மங்கள பொருட்கள் கடைகளில் கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டியுள்ளது.    கடந்த ஆண்டு ஒரு கிலோ கலர் கோலப்பொடி ரூ.30க்கு விற்றது. ஆனால் மத்திய அரசின் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இந்தாண்டு ரூ.10 அதிகரித்து கிலோவிற்கு ரூ.40க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் பெண்கள் ஆர்வமுடன்  கலர் கோல பொடிகளை கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

 இதுகுறித்து கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் அருகே பேன்சி கடை உரிமையாளரும், கலர்கோலப்பொடி தயாரித்து விற்பனை செய்பவருமான ஆசாத் கூறியதாவது: மார்கழி மாதம் பிறந்து விட்டதால் வண்ணமிகு கலர்கோல பொடிகளின் விற்பனை துவங்கியுள்ளது. ஐதராபாத், மதுரை போன்ற இடங்களில் இருந்து 24 வகையான நவீன கலர் கோல பொடிகளை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளோம். நெல்லை, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை போன்ற இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெள்ளை கலர் கோலப்பொடியுடன், நவீன கலர் கோல பொடிகளைகலந்து வண்ணமிக கலர் கோல பொடிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கிலோவிற்கு ரூ.30க்கு விற்ற கலர் கோலப்பொடி, இந்தாண்டு ஜிஎஸ்டி வரியால் கூடுதலாக ரூ.40க்கு விற்கப்படுகிறது. மேலும் 100 மில்லி கொண்ட சிறிய கலர் கோலபொடி பாக்கெட் ரூ5க்கு விற்கிறோம். நாங்கள் தயாரிக்கும்     நவீன கலர் கோலப்பொடிகளை சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, மதுரை, நெல்லை திருச்சி போன்ற பகுதிகளிலும் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.‘

Tags : Yotti Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் பரபரப்பு மது குடிக்க பணம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்